தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் கைதான முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், வழக்கு விசாரணைக்காக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் கடந்த 2020 ஜூன் 19-ல், போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தனர். சிபிஐ விசாரித்து வரும் இந்த வழக்கில் முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தான் அப்ரூவராக மாற விரும்புவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதற்கு உயிரிழந்த ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஸ்ரீதர், தனது தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ஸ்ரீதர், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது ஸ்ரீதர் தனது தரப்பு வாதத்தை 17 பக்கம் கொண்ட மனுவாக தாக்கல் செய்தார். அதனை படித்துப் பார்த்த நீதிபதி, ஸ்ரீதர் அப்ரூவராக அனுமதிக்க கோரிய மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.