தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனத்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் காவலர்கள், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
15 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 7-ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து 30 நாட்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.
இதனால் மண்டல பூஜையில் பங்கேற்று முருகரை தரிசிக்க நாள்தோறும் அதிகளவிலான பக்தர்கள் வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில் அளவுக்கதிகமான கூட்டத்தின் காரணமாக சண்முக விலாஸ் மண்டபம் முன்னர், சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பக்தர்கள், கேட்டை தள்ளி, முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது, காவலர்கள் மற்றும் பக்தர்களிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அவதியடைந்த பக்தர்கள், கூட்ட நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கூட்ட நெரிசலுக்கிடையே திருச்செந்தூர் முருகன் கோயிலில் நீதிபதி ஒருவர் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதாக பரவிய தகவலால், பக்தர்கள் கடும் கோபமடைந்து கோயில் ஊழியர்களுடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிறப்பு தரிசன அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என பேசும் நீதிபதிகளே அதனை மதிப்பதில்லை என பக்தர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்,