தமிழகத்தில் நிலம் கிடைக்காததால் 5 ரயில்வே திட்டங்கள் தாமதமாவதாக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.
அதில், 2009 – 2014ம் ஆண்டுக் காலத்தில் தமிழகத்துக்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு 879 கோடி ரூபாயாக மட்டுமே இருந்ததாகக் கூறிய அவர், 2025-26ம் நிதியாண்டில் தமிழகத்திற்கு ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு ஆறாயிரத்து 626 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழகத்தில் மொத்தம் நான்காயிரத்து 315 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் நிலையில், ஆயிரத்து 38 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் நிலம் கிடைக்காததால் திண்டிவனம் – திருவண்ணாமலை புதிய வழித்தடம், அத்திப்பட்டு – புத்தூர் புதிய வழித்தடம், மொரப்பூர் – தருமபுரி வழித்தடம், மன்னார்குடி – பட்டுக்கோட்டை வழித்தடம், தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை வழித்தடம் ஆகிய திட்டங்கள் தாமதமாவதாகவும் கூறினார்.
மேலும், திண்டிவனம் – கடலூர் இடையே புதுச்சேரி வழியாக 77 கிலோ மீட்டர் நீளத்துக்கு புதிய ரயில் வழித்தடம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.