நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் F404 இன்ஜின் இந்தியா வந்தடைந்துள்ளது. இது தேஜஸ் MK1A இலகு ரக போர் விமானத்துக்கான இரண்டாவது இன்ஜின் ஆகும். மீதமுள்ள 12 இன்ஜின்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வந்து சேரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வரும் செப்டம்பர் மாதத்தில், இந்திய விமானப்படை தனது கடைசி வலிமைமிக்க MiG-21 போர் விமானங்களை ஓய்வுக்கு அனுப்புகிறது. MiG-21 போர் விமானங்கள் முழுவதுமாக நீக்கப்பட்டவுடன், இந்திய விமானப்படையின் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை 29 ஆகக் குறையும். இது இதுவரை இல்லாத மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட 42 போர் விமானப் படைகளில் இருந்து, இந்திய விமானப் படை 31 பிரிவாக குறைந்துள்ளது. ஒவ்வொரு படைப்பிரிவிலும் சுமார் 18 போர் விமானங்கள் உள்ளன. எனவே, போர் விமானங்களை வாங்குவது குறித்து இந்திய விமானப்படை பரிசீலித்து வருகிறது.
ஏற்கெனவே உள்ள MiG-21 போர் விமானங்களுக்கு புதிய மாற்றாக ஒற்றை இன்ஜின் கொண்ட Mk-1A போர் விமானத்தை இந்தியா தயாரித்துள்ளது. 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்திய விமானப்படைக்காக 83 தேஜஸ் Mk-1A ஜெட் விமானங்களை வாங்குவதற்காக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் 48,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கையெழுத்திட்டது.
மேலும் 67,000 கோடி ரூபாய் மதிப்பில், 97 Mk-1A விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் பரிசீலனையில் உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், 28 ஆம் தேதி, சோதனை விமானியான ஓய்வு பெற்ற கேப்டன் கே.கே. வேணுகோபால் தேஜஸ் Mk-1A போர்விமானத்தில் 15 நிமிடங்கள் விண்ணில் பறந்து சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்தார்.
தேஜஸ் Mk1A என்பது ஒற்றை எஞ்சின் கொண்ட பல்துறை போர் விமானமாகும். இது அதிக அச்சுறுத்தல் உள்ள வான்வெளியில் பறக்கும். தாக்குதல், கடல்சார் உளவு மற்றும் வான் பாதுகாப்பு கடமைகளைத் திறம்படச் செய்யும் என்று கூறப்படுகிறது.
வெளியில் இருந்து பார்க்கும்போது விமானம் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், புதிய மின்னணுவியல், செயலிகள், காட்சி அமைப்புகள் மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட Fly-by-Wire ஃப்ளை-பை-வயர் அமைப்புகளின் வன்பொருள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இது புதிய Active Electronically Scanned Array ரேடாரை உள்ளடக்கிய இந்த போர்விமானம், வானிலிருந்து தரைக்கு ,வானிலிருந்து வானுக்குத் தாக்கும் திறன் கொண்டதாகும். மேலும், சுய-பாதுகாப்பு ஜாமர்கள் இந்த போர் விமானத்தை மின்னணுப் போரில் திறன் பட ஈடுபட அனுமதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
F404 இன்ஜின்களை விரைவாக வழங்கிய கையோடு, மேம்பட்ட F414 இயந்திரங்களின் கூட்டு உற்பத்தியை விரைவுபடுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. F414, தேஜஸ் Mk2-க்கும், இந்தியாவின் மேம்பட்ட நடுத்தர போர் விமானத்துக்கும் Advanced Medium Combat Aircraft என்ற சக்தியைக் கொடுக்கும். 5வது தலைமுறை ஸ்டெல்த் விமான வடிவமைப்புக்கு இது முக்கியமானதாகும்.
இப்போது வந்திருக்கும் F404 இன்ஜின்கள் இந்திய விமானப்படையின் 45 பறக்கும் டாகர்ஸ் மற்றும் 18 ஆகிய இரண்டு படைப்பிரிவுகளில் பணிசெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. போர் விமானங்களின் சக்திதான் செயல்திறனை வரையறுக்கும் என்பதால், இந்தியா இப்போது வான் போருக்கு ஏற்ற வேகத்தைப் பிடித்துள்ளது.