கன்னியாகுமரியில் கிணறுகளில் பெட்ரோல், டீசல் கலந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அருகில் உள்ள பெட்ரோல் பங்குகளில் புதிதாக எரிபொருள் நிரப்ப தற்காலிமாக தடை விதித்துள்ளனர்.
மார்த்தாண்டம் அருகேயுள்ள கீழபம்பம் பகுதியிலுள்ள வீடுகளில் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளில் பெட்ரோல் வாடை வீசி வருகிறது. ஜெகன் என்பவரின் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரில் டீசல், பெட்ரோல் கலந்திருந்தது. அந்த தண்ணீரை பற்ற வைத்தபோது தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி, தாசில்தார் மற்றும் தீயணைப்புத் துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அருகில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையிலும் ஆய்வு மேற்கொண்டு கிணற்றுத் தண்ணீரை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.
இதையடுத்து கீழ்பம்பம் பகுதியிலுள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் இருப்பு உள்ள பெட்ரோல், டீசலை விற்பனை செய்த பிறகு, புதிதாக பெட்ரோல், டீசல் நிரப்ப அதிகாரிகள் தடை விதித்தனர். மேலும், கசிவை கண்டறிந்த பிறகு பெட்ரோல், டீசலை நிரப்பினால் போதும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.