79-வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், சென்னை ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தில் ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் மண்டல இயக்குநர் உமா சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, ஆயுதப்படையின் பெண் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் பேசிய அவர், பல்வேறு துறைகளில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகத் தெரிவித்தார். மேலும், வாடிக்கையாளர்களுக்கான சேவையை எளிதாக்கும் வகையில் ரிசர்வ் வங்கி பணியாற்றி வருவதாக உமா சங்கர் குறிப்பிட்டார்.
இதேபோல், சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மைதானத்தில், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். பின்னர் பேசிய அவர், ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், 95 ரயில் நிலையங்களில், 13 நிலையங்கள் மே மாதம் திறக்கப்பட்டதாகவும், மீதமுள்ள ரயில் நிலையங்கள் டிசம்பருக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சென்னை துறைமுக ஆணையம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், சென்னை துறைமுக ஆணைய தலைவர் சுனில் பாலிவால், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், துறைமுக வளர்ச்சியில் எட்டிய சாதனைகள், எதிர்கால திட்டங்கள், பணியாளர் நலன் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளைப் பற்றி சுனில் பாலிவால் விளக்கினார். இந்த விழாவில், சென்னை துறைமுக ஆணைய துணைத் தலைவர் விஸ்வநாதன், மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.