சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
அப்போது பாமக விதிகளில் திருத்தம் செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் அதிகாரம் ராமதாசுக்கு வழங்கப்படுகிறது என்றும், ராமதாசை தவிர வேறு யாரும் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம் ராமதாசுக்கு வழங்கப்படுகிறது என்றும், பொதுக்குழுவுக்கு நிறுவனர் அழைக்கப்பட வேண்டும் என திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
மேலும், வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10.5 சதவீத தனி இடஒதுக்கீடு சட்டம் ஆக்கப்பட்டும், நிறைவேற்றாமல் இருப்பதற்கு பாமக நிறுவனர் தலைமையில் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்றும், தமிழக அரசு தட்டிகழிக்காமல் உடனடியாக சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.