அணைக்கட்டு தொகுதியில் மக்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகனம் வந்து இடையூறு செய்ததால் எடப்பாடி பழனிசாமி கோபமடைந்தார்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒருபகுதியாக வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் மக்கள் மத்தியில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று குறுக்கே வந்தது. ஆனால் அதில் நோயாளி இல்லாததால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிசாமி, கூட்டத்தில் இடையூறு செய்வதற்காக திமுக அரசு ஆம்புலன்ஸை அனுப்பி வைப்பதாக கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, இதுபோல் ஆயிரம் ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுப்பினாலும் மக்களின் மனதை மாற்ற முடியாது எனக் கூறினார். இன்னொரு முறை நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால், அதனை ஓட்டிவந்த ஓட்டுநரே நோயாளியாக செல்ல வேண்டிய நிலை ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.