அலாஸ்காவில் இருந்து ரஷ்ய தூதுக்குழு திரும்பிச் செல்லும்போது, மூன்று ஜெட் விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்ப அதிபர் விளாடிமிர் புதின், இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர் செலுத்தியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் நிலைமை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் உயர்மட்ட சந்திப்பிற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 15-ம் தேதி அலாஸ்கா சென்றார்.
அங்கு அவருக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்ட போதிலும், புதினும் அவரது குழுவினரும் தங்கள் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப் பணம் செலுத்தும் நிலை ஏற்பட்டது.
ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக எரிபொருள் நிரப்புவதற்குக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ விளக்கம் அளித்திருக்கிறார்.