மேலூர் அருகே இருசமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் ஒருசமூக மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் அ.வல்லாளபட்டி கிராமத்தில் ஒருசமூகத்தைச் சேர்ந்த சிறுவனை மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள், மாற்றுச் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் பெண்களையும் தரக்குறைவாகப் பேசியதாகவும் தெரிகிறது.
இதில், காயமடைந்த பிரசாத் மற்றும் கருப்பசாமி ஆகியோர் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறுவனின் உறவினர்களை கைது செய்ய வலியுறுத்தி மேலூர் – அழகர்கோவில் சாலையில் ஒருசமூக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டம் நடந்த இடத்திற்கு வந்த சிறுவனின் உறவினர் தினேஷை அவர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவரை அழைத்துச் செல்ல முயன்ற போலீசார் மீது தண்ணீர் பாட்டில்களை வீசியும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து மாவட்ட எஸ்பி அரவிந்தன் மற்றும் மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.