நாடாளுமன்ற கூட்டத் தொடரின் கடைசி நாளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் நாளில் இருந்தே பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் ஆப்ரேசன் சிந்தூர் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தன.
இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அலுவல்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று நாடாளுமன்றம் கூடியது. அப்போது மக்களவையில் பதவி பறிப்பு மசோதாவிற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அதிருப்தி அடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா, கடைசி நாளிலும் கேள்வி நேரத்தை நடத்த விரும்பவில்லை என்றால் அவையை ஒத்தி வைப்பதாக கூறி எழுந்து சென்றார். மக்களவை தொடங்கிய 30 விநாடிகளில் எதிர்க்கட்சிகளின் அமளியால் பிற்பகல் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.