சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளால் பாகிஸ்தான் கிரே பட்டியலில் சேர்ந்துவிடும் அபாயம் இருப்பதாகப் பாகிஸ்தான் நிதியமைச்சர் ஔரங்கசீப் அச்சம் தெரிவித்திருக்கிறார். அவரது இந்த பேச்சு பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு பகிரங்கமாகவே நிதி திரட்டுகிறது என்ற இந்தியாவின் வாதத்திற்கு வலு சேர்த்துள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
இந்தியாவின் தாக்குதலால் தகர்க்கப்பட்ட பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டமைக்க பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மூலம் பகிரங்கமாக நிதி திரட்டியது அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தது. சர்வதேச நிதி நடவடிக்கை பணி குழுவின் கண்ணில் மண்ணை துாவி,’ஈஸி பைசா’, ‘சதாபே’ போன்ற டிஜிட்டல் செயலிகள் மூலம் 400 கோடி ரூபாய் திரட்டும் நடவடிக்கையில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டுள்ளது.
இதனை ஒப்புக்கொள்ளும் வகையில் பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப் பேசியிருப்பது, சட்டவிரோத பண பரிவர்த்தனைகள் உண்மைதான் என்பதை உறுதி செய்துள்ளது. நிகழ்ச்சில் ஒன்றில் பேசிய அவர், 6 ஆண்டுகளுக்குப் பின்னர், கடினமான சூழலுக்கு மத்தியில் சாம்பல் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் வெளியேறியிருப்பதாகவும், ஒழுங்குபடுத்தப்படாத டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் பாகிஸ்தானை மீண்டும் கிரே பட்டியலில் சேர்க்க காரணமாகிவிடக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானில் 25 சதவிகித மக்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத டிஜிட்டல் பரிவர்த்தனைகளை, ஒழுங்குமுறைக்குள் கொண்டுவராவிட்டால், சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் நடவடிக்கைக்கு ஆளாகி, நாடு மீண்டும் கிரே பட்டியலுக்குள் விழும் அபாயம் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் சட்டவிரோதமாகவே நடைபெற்று வருகின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனையை முறைப்படுத்துவதற்கான சட்டங்களைத் திருத்துவதில் பாகிஸ்தான் பின்னோக்கியே உள்ளது. கிரிப்டோ மற்றும் டிஜிட்டல் சொத்துக்களுக்கான ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்குவதற்காக முன்மொழியப்பட்ட அவசரச் சட்டம் இன்னும் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.
பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளிக்கும் விவகாரத்தில், கடந்த 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தான கிரே பட்டிலில் சேர்க்கப்பட்டது. அதன் பின்னரும், பயங்கரவாத நிதி மற்றும் பணமோசடியைத் தடுக்கத் தவறியதன் காரணமாக அப்பட்டியலில் இருந்து பாகிஸ்தானால் மீள முடியவில்லை. 2018 ஜூன் முதல் 2022 அக்டோபர் வரை, பாகிஸ்தான் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகச் சாம்பல் பட்டியலில் இருந்தது. சர்வதேச அளவிலான அழுத்தத்தின் காரணமாக, கிரே பட்டியலில் இருந்து வெளியேறப் பாகிஸ்தான் கடுமையாகப் போராட வேண்டியதிருந்தது.
மீண்டும் கிரே நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்பட்டால், பயங்கரவாத நிதி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியாத நாடு என்று சர்வதேச நிதி நடவடிக்கை குழுவால் அறிவிக்கப்படும். இதனால் சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற அமைப்புகளிடம் இருந்து கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
கிரே பட்டியல் என்பது, சரியான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட நாட்டை அறிவுறுத்தும் எச்சரிக்கையாகும். அதைப் பொருட்படுத்தாமல், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகக் கடுமையான விதிகளைக் கொண்ட ‘கருப்பு பட்டியலில்’ பாகிஸ்தான் சேர்க்கப்படும். இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் ஔரங்கசீப்பின் பேச்சு, பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டுவதை பாகிஸ்தான் அரசு கொள்கையாகவே வைத்திருப்பதாக இந்தியா முன்வைத்துள்ள வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.