உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட இரண்டு ஸ்டெல்த் போர்க் கப்பல்களான ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி ஆகியவை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. நாட்டில், இரண்டு வெவ்வேறு கப்பல் கட்டும் தளங்களில் தயாரிக்கப்பட்ட இரண்டு பெரிய போர்க்கப்பல்கள் ஒரே நாளில் கடற்படையில் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ப்ராஜெக்ட் 17A என்னும் போர்க்கப்பல் கட்டும் திட்டம் 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது, இந்திய கடற்படையின் மேம்பட்ட ஸ்டெல்த் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு போர்க்கப்பல்களை உருவாக்கும் திட்டமாகும்.
( Mazagon Dock Shipbuilders ) மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் (MDL) மற்றும் ( Garden Reach Shipbuilders & Engineers )கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (GRSE) ஆகியவை இந்தப் போர்க்கப்பல்களை உருவாக்கும் பணியை மேற்கொண்டன.
ப்ராஜெக்ட் 17A திட்டத்தில் தயாரிக்கப்பட்ட முதல் கப்பல் ஐஎன்எஸ் நீலகிரி. இது ஷிவாலிக் வகையைச் சேர்ந்த போர்க் கப்பல்களைக் காட்டிலும் நவீனத் தொழில்நுட்பங்கள் கொண்டதாகும். இந்தப் போர் கப்பலைப் பிரதமர் மோடி இந்த ஆண்டு ஜனவரி மாதம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதனுடன், Project-75 திட்டத்தின் ஒருபகுதியாக வடிவமைக்கப்பட்ட ஐஎன்எஸ் வாக்ஷீர், போர்க்கப்பலும் கடற்படையில் இணைக்கப்பட்டது. Project-75 திட்டத்தில் ஏற்கனவே 5 போர்க் கப்பல்கள் உருவாக்கப்பட்ட நிலையில் ஐஎன்எஸ் வாக்சீர் 6-வது மற்றும் கடைசி கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், Project-75 திட்டத்தின் நான்காவது மற்றும் கடைசி போர்க்கப்பலான ஐஎன்எஸ் சூரக் கடற்படையில் இணைக்கப் பட்டது. இது உலகின் மிகப்பெரிய மற்றும் அதி நவீன வசதிகளுடன் கூடிய ஏவுகணை எதிர்ப்பு போர்க்கப்பலாகும். ஆயுதச் சென்சார் அமைப்புகள், மேம்பட்ட நெட்வொர்க் அமைப்புகள் ஐஎன்எஸ் சூரத்தின் பலமாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், 100 சதவீதம் உள்நாட்டு அதிநவீன ரகசிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி போர்க்கப்பல்கள் முந்தைய ஷிவாலிக் ரகப் போர்க்கப்பல்களை விட 5 சதவீதம் பெரியவை ஆகும். இதன் மொத்த எடைச் சுமார் 6,700 டன் ஆகும்.
ஐஎன்எஸ் உதயகிரி, கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்ட 100வது கப்பல் என்பது குறிப்பிடத் தக்கது. சுமார் 200 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு தொழில்துறைச் சுற்றுச்சூழல் அமைப்பின் விளைவாக இந்தப் போர்க் கப்பல்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், சுமார் 4,000க்கும் மேற்பட்டோருக்கு நேரடியாகவும், சுமார் 10,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போர்க்கப்பல்கள், CODOG எனப்படும் எரிவாயு விசையாழிகள் மற்றும் டீசல் என்ஜின்களின் கலவையைப் பயன்படுத்தி, இயங்குகின்றன. இந்த நவீன அமைப்பு, சிறந்த வேகம், செயல்திறன் ஆகியவற்றை வழங்குவதோடு, கையாளுவதை எளிதாக்குகிறது.
சூப்பர்சோனிக் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகள், நடுத்தர தூர தரையிலிருந்து வான் ஏவுகணைகள், 30மிமீ மற்றும் 12.7மிமீ துப்பாக்கிகளுடன் கூடிய நெருக்கமான ஆயுத அமைப்புகள், 76மிமீ பிரதான துப்பாக்கி மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஆயுதங்கள் எனப் பல்வேறு ஆயுதத் தளவாடங்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் வளர்ந்து வரும் கடல் விரிவாக்கம் இந்தியாவுக்குப் பெரும் சவாலாக மாறி வரும் நிலையில், அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்க தேசமும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
இந்நிலையில், ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி ஆகிய போர்க் கப்பல்கள் இந்திய கடற்படைக்கு வலிமைச் சேர்கின்றன. அடுத்த ஆண்டுக்குள், ஐஎன்எஸ் தாரகிரி, ஐஎன்எஸ் மகேந்திரகிரி, ஐஎன்எஸ் துனகிரி மற்றும் ஐஎன்எஸ் விந்தியகிரி ஆகிய போர்க் கப்பல்கள் இந்திய கடற்படையில் இணைக்கப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
கடல் வர்த்தகப் பாதைகளைப் பாதுகாப்பது மற்றும் மலாக்கா நீரிணையில் இருந்து ஆப்பிரிக்கா வரை இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் இருப்பை நிலைநிறுத்துவதற்கும் இந்தப் போர்க் கப்பல்கள் துணை நிற்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட போர்க் கப்பல்களால் இந்தியப் பெருங்கடல் பாதுகாக்கப்படுகிறது. இது, பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் உண்மையான வெற்றியாகும்.