அமெரிக்க வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பஞ்சாப் மாநிலத்தில் செயல்படும் புகழ்பெற்ற தனியார் பல்கலைக் கழக வளாகத்தில் கோக், பெப்சி பானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்து வருகிறார்.
அந்த வகையில் அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்கள் மீது அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார்.
இதற்கு இந்தியாவில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் புகழ்பெற்ற பல்கலைக் கழங்களில் ஒன்றான லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் கோக், பெப்ஸி உள்ளிட்ட அமெரிக்க குளிர்பானங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய பல்கலைக் கழகத்தின் வேந்தர் அசோக் குமார் மிட்டல், இந்தியாவின் வலிமையை அமெரிக்கா குறைத்து மதிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் வரி விதிப்பிற்கு அமெரிக்கா பதிலளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அசோக் குமார் மிட்டல் தெரிவித்தார்.