வரும் 31-ம் தேதி ஓய்வு பெறவுள்ள தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் காவலர் வீட்டுவசதி வாரிய டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் ஆகியோருக்கு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.
சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில், ஓய்வுபெறவுள்ள தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால், காவலர் வீட்டுவசதி வாரிய டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் ஆகியோர் கலந்துகொண்டு, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
முன்னதாக அணிவகுத்து நின்ற கமாண்டோ படையினர், கடலோர காவல் படையினர், ஆயுதப்படை காவலர்கள், பேரிடர் மீட்பு படையினர், மகளிர் காவல்துறையினர், நீலகிரி காவல் பிரிவினர் உள்ளிட்டோரை, டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் ஆகியோர் தனித்தனியாக திறந்தவெளி வாகனத்தில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள் சார்பில் டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மேடையில் பேசிய டிஜிபி சங்கர் ஜிவால், தன்னுடன் பணியாற்றிய அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். கால நேரம் பார்க்காமல் தனக்காக பணியாற்றிய காவலர்களின் அர்ப்பணிப்பை மறக்க முடியாது என நெகிழ்ச்சியுடன் கூறிய அவர், அவர்கள் உழைப்பின் பிரதிபலிப்பாகவே தான் இங்கு நிற்பதாகவும் பெருமிதத்துடன் கூறினார்.