தமிழகம் முழுவதும் விநாயகர் சிலை ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை மந்தைவெளி பகுதியில் மேள தாளங்கள் முழங்க ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, பொதுமக்கள் ஆடி பாடியும், வண்ணப்பொடிகளை பூசியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன. நாயுடுபுரம் பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் ஊர்வலமாக சென்று சிலைகள் கரைக்கப்பட்டன. அப்போது பெண்கள் ஆயிரத்து எட்டு விநாயகர் சிலைகளை எடுத்து சென்று ஆற்றில் கரைத்து வழிபாடு நடத்தினர்.
சிவகங்கையில் பா.ஜ.க சார்பில் 8ஆம் ஆண்டாக விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. ராஜசேகரனார் சாலை, அரண்மனை வாசல், மேலராஜ வீதி, காந்தி வீதி, கோர்ட் வாசல் வழியாக தெப்பக்குளம் கொண்டு செல்லப்பட்டு சிலைகள் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தை, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடலில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன.
புதுச்சேரியில் பழைய நீதிமன்ற வளாகம் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார். 150 பெரிய விநாயகர் சிலைகள் மற்றும் வீடுகளில் பூஜை செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.