கடையநல்லூர் நகர்மன்ற கூட்டரங்கில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தி பாஜக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது, கூட்டரங்களில் இருந்து அகற்றப்பட்ட பிரதமர் மோடியின் படத்தை மீண்டும் வைக்க கோரி பாஜக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக நகராட்சி அலுவலகம் முன்பு பாஜக தொண்டர்களும் போராட்டம் நடத்தினர். இதனை அறிந்த திமுகவினர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாஜகவினரை கைது செய்ய வேண்டும் எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, பாஜக கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், நகர்மன்ற கூட்டரங்கில் பிரதமரின் புகைப்படம் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை அடுத்து, 11 மணி நேர உள்ளிருப்பு போராட்டத்தை பாஜக கவுன்சிலர்கள் கைவிட்டனர்.