அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் விடுத்துள்ள எச்சரிக்கை பேசு பொருளாகியுள்ளது. மக்கள் தொகைக் குறைவது, வெளிநாட்டினர் குடியேற்றத்தால் மேற்குலக நாடுகளே இருக்காது என்று அவர்க் கூறியது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் மக்கள் தொகைக் குறைந்து வருவது குறித்து டெஸ்டா நிறுவனர் எலான் மஸ்க் அடிக்கடி எச்சரித்து வருகிறார்… தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், மக்கள் தொகைச் சரிவும், பிறப்பு விகிதம் குறைவதும் மேற்குலக நாடுகளுக்கு நம்பர் ஒன் அச்சுறுத்தல் என்று எச்சரித்துள்ளார். இதுதொடர்ந்தால் மேற்குலக நாடுகளே இல்லாமல் போய்விடும் என்று கூறியிருக்கிறார்.
பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் கருவுறுதல் குறைந்து வருவதாகவும், குடியேற்றம், இடம்பெயர்தல் போன்ற காரணங்களால் சில பள்ளிகளில் பூர்விகப் பிரிட்டன் மக்கள் சிறுபான்மையினராக மாறியிருப்பதாக அதிர்ச்சிகரமான புள்ளிவிவங்களையும் வெளியிட்டுள்ளார். மக்கள் தொகைச் சரிவு, இடப்பெயர்வு போன்றவை மேற்கத்திய சமூகங்களை மறுஉருவாக்கம் செய்ய உதவுமா? என்ற விவாதத்திற்கும் வித்திட்டுள்ளது.
பல வளர்ந்த நாடுகளில் மக்கள் தொகையைத் தக்கவைக்கத் தேவையானதைவிட கருவுறுதல் கணிசமான அளவுக்கு குறைந்திப்பதை மேற்கோள் காட்டியுள்ள மஸ்க், அமெரிக்கா, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளில் கருவுறுதல் மிக மிகக் குறைவாக இருப்பது குறித்த தனது கவலைகளையும் பதிவிட்டுளளார். பிறப்பு விகிதங்கள் குறைவது பண்டைய நாகரிகங்கள் வீழ்ச்சியடைந்ததில் முக்கிய பங்காற்றியிருப்பதையும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
பிறப்பு விகிதம் குறைவதே மூலப் பிரச்னையாகக் கருதும் எலான் மஸ்க், பூர்வீகக் குடிகளின் கருவுறுதல் சரிந்து வரும்போது, மேற்கத்திய நாடுகளின் கலாச்சார, பொருளாதார, சமூக அடிதளங்களைத் தக்கவைக்க முடியாத நிலை உருவாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
எலான் மஸ்க்கின் எச்சரிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியத்தின் அறிக்கையும் வலுவூட்டியுள்ளது. The Real Fertility Crisis என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குழந்தை வளர்ப்பு செலவுகள் அதிகரிப்பு, கணவன்-மனைவி இணைந்து வாழ்வதில் உள்ள சவால்கள், உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச அளவில் கருவுறுதல் என்பது குறைந்து வருவதாகக் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாகக் கருவுறுதல் விகிதம் பொதுவாக 2.1 என்ற விகிதாச்சார அடிப்படையில் இருக்க வேண்டும், ஆனால் அமெரிக்கா, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் அந்த விகிதம் 1.3 முதல் 1.66 வரை மட்டுமே உள்ளதாகவும் எலான் மஸ்க் குறிப்பிட்டிருக்கிறார்.
எலான் மஸ்க் ஏற்கனவே 14 குழந்தைகளுக்குத் தந்தையாக இருக்கும் நிலையில், வாடகைத்தாய், பாரம்பரியமற்ற வாழ்க்கை முறை மூலம் கூட இன்னும் குழந்தைகளைப் பெற்றுள்ள கொள்ள விரும்புவதாகக் கூறியிருக்கிறார்.
குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை, தாய்மை விருதுகள், பெற்றோருக்கு உதவித்தொகைப் போன்ற அவரது சில திட்டங்கள், டிரம்ப் நிர்வாகத்தால் பரிசீலிக்கப்பட்டன. அவரது இந்த யோசனைப் பூர்விக மக்களின் எண்ணிக்கையை உயர்த்தக்கூடிய புது முயற்சியாகவே பார்க்கப்பட்டன.
மக்கள் தொகையை அதிகரிப்பதில், மஸ்க்கின் குழந்தை வளர்ப்பு முறை ஒருபக்கம் விமர்சிக்கப்பட்டாலும், வெள்ளையர், பூர்வீக அமெரிக்கர்களிடையே பிறப்பு விகிதம் அதிகரிப்பதில் குறுகிய கவனம் செலுத்தும் pronatalist movement பற்றிய கவலைகளையும் இது எழுப்புகிறது.
அதே நேரத்தில் மக்கள்தொகைப் பற்றிய எலான் மஸ்கின் பார்வையை விமர்சித்துள்ள Population Matters அறிக்கை, உலக மக்கள் தொகை அடுத்த நூற்றாண்டிலும் நன்றாக வளரும் என்று தெரிவித்துள்ளது. இதேபோன்று, முதியோரின் எண்ணிக்கைக் கடுமையான பொருளாதாரப் பிரச்னையாக பார்க்கப்பட்டாலும், ஆட்டோமேஷன், குடியேற்றம் போன்றவை அதன் தாக்கத்தைக் குறைக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரிட்டிஷ் முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளி மாணவர்களில் வெள்ளைப் பிரிட்டிஷ் குழந்தைகள் தோராயமாக 65 சதவிதம் பேர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றனர். இது சில தசாப்தங்களுக்கு முன்பு 80–85 சதவிகிதமாக இருந்ததாகவும், எதிர்காலத்தில் 50 சதவிகிதத்திற்கும் கீழ் குறையக் கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்கின் கருத்துகள் அடையாளம், கலாச்சாரம், நிலைதன்மைப் பற்றிய ஆழமான கவலைகளை வெளிப்படுத்துவதாகக் கூறும் நிபுணர்கள், கருவுறுதல் தரவுகள் மட்டும் மேற்கத்திய சமூகங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்காது என்றும், பொருளாதாரம், கல்வி, இடப்பெயர்வு மற்றும் ஒருங்கிணைப்பு போன்றவற்றையும் சார்ந்திருக்கும் என்கிறார்கள்.
















