கடும் வெப்பம் மற்றும் பருவம் தவறிய மழை போன்ற காலநிலை மாற்றங்கள், தேயிலை உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
உலகளவில் தேநீர் நுகர்வு அதிகமுள்ள நாடாக இந்தியா உள்ளது. அதே போல் தேயிலை உற்பத்தியிலும் இந்தியா முக்கிய இடத்தில் இருக்கிறது.
மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டாலும் 50 சதவீதம் தேயிலை அசாம் மாநிலத்தில் இருந்து கிடைக்கிறது.
இந்நிலையில் சமீப காலமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றமானது தேயிலை உற்பத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடுமையான வெப்பம், பருவம் தவறிய மழை காரணமாக தேயிலை உற்பத்தி குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் இந்திய தேயிலை கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, ஒரே மாதத்தில் தேயிலை உற்பத்தி 10 சதவீதம் வரை சரிந்துள்ளது.