ஜென்-இசட் தலைமுறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது நடந்த துயர சம்பவத்தை எண்ணி வருத்தமடைவதாக நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக ஜென்-இசட் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோரிக்கைகளை வென்றெடுக்க இளைஞர்கள் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துவார்கள் என்று நம்பியதாகவும், ஆனால், பல்வேறு சுயநலவாதிகள் போராட்டத்தில் ஊடுருவியதால் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு அரசாங்கம் ஆதரவாக இல்லை எனவும் கூறியுள்ளார். சமூக ஊடகங்களை பயன்படுத்தவதற்கான சூழலை அரசு உறுதி செய்வதற்குள், இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போராட்டத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் காரணங்களை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்ய ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுப்பதற்கான அரசின் பரிந்துரை 15 நாட்களுக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் சர்மா ஒலி உறுதியளித்துள்ளார்.