தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்திய நிலையில், தூத்துக்குடியில் பீகார் இளைஞர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பு மற்றும் நிதி திரட்டும் பணியில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. அவர்கள் கைது செய்ய, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் மற்றும் ஜம்மு – காஷ்மீரில் 22 இடங்களில் நேற்று, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
குறிப்பாக சென்னை அருகே தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவரை அண்மையில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த முஸ்பிக் ஆலம் என்பவருடன் செல்போனில் பேசி இருப்பது தெரியவந்தது.
அந்த நபர் தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி பகுதியில் பெயிண்ட் அடிக்கும் பணி செய்து வந்த நிலையில், அங்கு சென்ற அதிகாரிகள், முஸ்பிக் ஆலம் உட்பட 7 பேர் தங்கியிருந்த அறையை சோதனையிட்டனர். அதோடு முஸ்பிக் ஆலம் மற்றும் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
ஆனால், தீவிரவாதத்துடன் தொடர்புடைய எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள், நால்வரையும் தாளமுத்துநகர் போலீசில் ஒப்படைத்து விட்டு சென்றனர். அப்போது மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளும் 4 பேரிடமும் விசாரணை நடத்தினர்.