சீனாவில் பலமணி நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்திக் கொண்டிருந்த சிறுவனுக்குப் பக்கவாதம் ஏற்பட்ட சம்பவம் அதிர வைத்துள்ளது.
இன்றைய கால இளைஞர்கள் எப்போதும் ஸ்மார்ட் போனுக்குள் மூழ்கி பொழுதுபோக்கி வருகின்றனர். இரவு பகலாகத் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் சீனாவின் புஜியான் மாகாணத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், பலமணி நேரம் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.
கழுத்தை முன்பக்கம் சாய்த்தபடி ஸ்மார்ட்போன் பயன்படுத்தியதால் அவரது கழுத்து தமனிகளில் ரத்த ஓட்டம் தடைபட்டு முதுகெலும்பு தமனிகளில் ரத்த உறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்துப் பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மாணவருக்கு 2 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ரத்த உறைவு அகற்றப்பட்டது. பல மணி நேரம் ஸ்மார்ட்போனில் மூழ்கிக் கிடக்கும் இளைய தலைமுறைக்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.