உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகளின் ஆய்வுக்குப் பிறகும் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தென் மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்கும் தாமிரபரணி ஆறு, கழிவுநீர் கலப்பதால் நாள்தோறும் மாசடைந்து வருகிறது.
இதுதொடர்பான புகாரையடுத்துத் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், கடந்தாண்டு நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது நெல்லையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது நேரடியாக ஆற்றில் கலப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நெல்லை மாநகராட்சிக்கு 28 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் ஆணையம் விதித்த அபராத தொகையை மாநகராட்சி இன்னும் செலுத்தாத நிலையில், தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து கழிவுநீர் கலக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்னைக்கு அரசு தீர்வுகாண வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.