ஆன்லைன் சூதாட்ட செயலி பண மோசடி வழக்கில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பணமோசடி நடைபெற்றதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அந்த வரிசையில் 1xBet என்ற சட்டவிரோதச் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பாவுக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் தொடர்பான விளம்பரங்களில் இருவரும் தோன்றியதால் அவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அதன்படி ராபின் உத்தப்பாவை வருகிற 22-ம் தேதியும், யுவராஜ் சிங்கை 23-ம் தேதியும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவானை அமலாக்கத்துறை விசாரித்தது குறிப்பிடத்தக்கது.