இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் தமிழ் மொழியையும் மேம்படுத்துவதற்கு உண்மையிலேயே யாராவது தொடர்ந்து உழைத்து வருகிறார் என்றால் அவர், பிரதமர் மோடி அவர்கள் தான். உலகளாவிய அளவில் தமிழுக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் மரியாதை செலுத்தி வரும் பிரதமர் மோடி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சர்வதேச அரங்கில் தமிழையும் தமிழ்க் கலாச்சாரத்தையும், தமிழர்களையும் தொடர்ந்து பெருமைப்படுத்தி வருகிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2019 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையில், பிரதமர் மோடி, உலகின் மிகத் தொன்மையான மொழித் தமிழ் எனப் போற்றி பேசியிருந்தார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சங்கப்புலவர்க் கணியன் பூங்குன்றனாரின் வரிகளை மேற்கோள் காட்டி, உலகம் ஒரு குடும்பம் யாவரும் உறவுகள் எனப் பாரதத்தின் தன்மையை எடுத்துச் சொல்லியிருந்தார்.
அதேபோல், இந்தியாவுக்கு வந்த சீன அதிபர் ஜி ஜின் பிங்குடனான தனது சந்திப்பை, தமிழகத்தின் மகாபலிபுரத்தில் நடத்தினார் பிரதமர் மோடி. அப்போது தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்தபடி சீன அதிபருடன் அவர்ப் பேச்சுவார்த்தை நடத்தியதை உலகமே ஆச்சரியமாகப் பார்த்தது.
பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு நிகழ்ச்சிகளில் திருவள்ளுவரையும் திருக்குறளையும் பெருமையாகப் பேசி வருகிறார் பிரதமர் மோடி. பிரான்சில் திருவள்ளுவர்க்கு மிகப்பெரிய சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி, திருவள்ளுவர் பெயரில் முதல் சர்வதேச கலாச்சார மையம் சிங்கப்பூரில் தொடங்கப்பட உள்ளது என அறிவித்தார். உலகின் மிகத் தொன்மையான பழமையான மொழியான தமிழில், திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் உலகுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது என்று பாராட்டிய மோடி, திருக்குறளின் கருத்துக்கள் இன்றும் எல்லா மக்களுக்கும் பொருத்தமாக உள்ளது தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு, மலேசியா பிரதமருடன் நடந்த சந்திப்பின்போது, திருவள்ளுவர் பெயரில் மலேசியாவில் ஒரு இருக்கை அமைக்கும் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்ப் பிரதமர் மோடி.
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மையத்துக்கு ‘திருவள்ளுவர் கலாச்சார மையம்’ எனப் பிரதமர் மோடி பெயர்ச் சூட்டியுள்ளார்.
முதல்முறையாக மத்திய அரசின் ஆதரவுடன் பிஜி போன்ற நாடுகளில் தமிழ் கற்பிக்கும் திட்டங்கள் பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்டுள்ளன. இது கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத ஒரு சாதனை எனப் போற்றப்படுகிறது.
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில், தமிழ் சைவ ஆதீனங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டது. மேலும் புதிய நாடாளுமன்றத்தில், தமிழர்களின் பாரம்பரிய தர்ம சின்னமான செங்கோல் தேசிய மரியாதையுடன் பிரதமர் மோடி நிறுவியுள்ளார். இதே போல இந்தியா தலைமையேற்று நடத்திய ஜி-20 மாநாட்டு முகப்பில், பிரம்மாண்டமான தில்லை நடராஜர் சிலை நிறுவப்பட்டது. இதன் மூலம், தமிழரின் சைவசித்தாந்த தத்துவம் உலகக் கவனத்தைப் பெற்றது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடல் கடந்து தெற்காசியாவின் பல பகுதிகளை ஆட்சி செய்த பேரரசர் ராஜராஜ சோழனையும் கங்கைக் கொண்ட ராஜேந்திரச் சோழனையும் பெருமைப்படுத்தும் விதமாகப் பிரதமர் மோடி விழாவெடுத்துச் சிறப்பித்துள்ளார்.
கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்த பிரதமர் மோடி, ராஜேந்திரச் சோழனின் ஆடி திருவாதிரை நிகழ்வில் கலந்து கொண்டு ராஜேந்திரச் சோழனுக்கு நினைவு நாணயத்தை வெளியிட்டார். மேலும் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திரச் சோழன் ஆகிய பேரரசர்களுக்கு பிரம்மாண்ட சிலைகள் தமிழகத்தில் அமைக்கப்படும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
காசி சங்கமம் என்று நிகழ்ச்சிகள் மூலம், தமிழின் பெருமைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தமிழில் முதல் முறையாக மத்திய அரசு தேர்வுகள் எழுதும் உரிமை வழங்கியுள்ளது.
மேலும், மருத்துவக் கல்வியையும் தமிழில் வழங்க வேண்டும் எனப் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடியின் உத்தரவின் படி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பெயரில் தமிழ் இருக்கையை உருவாக்க யுஜிசி அனுமதி அளித்துள்ளது.
திருக்குறள், தொல்காப்பியம்உட்பட சங்க இலக்கியங்கள் அனைத்தையும், அனைத்து இந்திய மொழிகளிலும், அரபி, பாரசீகம், ஆங்கிலம் ஆகிய அயலக ,மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடும் செயல்திட்டத்தை பிரதமர் மோடி முன்னெடுத்துள்ளார்.
பப்புவா நியூ கினியாவில் ‘திருக்குறள்’ புத்தகத்தின் டோக் பிசின் மொழிப் பெயர்ப்பு வெளியீட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழ் மொழி நம்முடைய மொழி என்றும், ஒவ்வொரு இந்தியனின் மொழி என்றும் மற்றும் உலகின் பழமையான மொழி என்றும் பெருமையுடன் கூறியிருந்தார்.
செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றும் போதும், லடாக்கில் இராணுவ வீரர்கள் மத்தியில் உரையாடும் போதும், நாட்டு மாணவர்களிடம் பேசும் போதும், மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினாலும்,தமிழையும் தமிழரையும் தமிழ் கலாச்சாரத்தையும் பிரதமர் மோடி தவறாது பெருமைப் படுத்தி வருகிறார்.
தமிழ் மொழிக் குறித்து பேசுவது தனது வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான தருணம் என உணர்ச்சி பொங்க அடிக்கடி கூறும் பிரதமர் மோடி, தமிழின் புகழ் பரப்பும் ஒரு சிறந்த தமிழ் பற்றாளர் என்றாலும் மிகையில்லை.