சிவகங்கையில் கடன் தொல்லை காரணமாக கூலித்தொழிலாளி ஒருவர் காவல்நிலையம் முன்பு தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் வடக்கு சாலைக் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் அதே பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலைச் செய்து வந்தார்.
இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் 30 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதனை அவர் திருப்பி செலுத்தவில்லை எனத் தெரிவித்த நிறுவனம், சந்திரசேகர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்தது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார்க் கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் கொடுத்ததாகத் தெரிகிறது.
இருப்பினும் அவர்க் கடனை செலுத்த முடியாததால் விசாரணைக்காகச் சந்திரசேகர் காவல்நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டார்.
அப்போது அவர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சந்திரசேகரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.