அமெரிக்காவில் எச்-1பி விசாக்களுக்கான வருடாந்திர விண்ணப்பக் கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக உயர்த்தி அதிபர் டிரம்ப் அதரடி உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக 2வது முறையாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து விசா வழங்குவதில் பல நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் எச்-1பி விசாக்களுக்கான வருடாந்திர விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்தும் கோப்பில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அப்போது பேசிய வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவார்டு லுட்னிக், அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு எச் – 1 பி விசா விண்ணப்ப கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும்,
வருடாந்திர விண்ணப்பக் கட்டணம் ஒரு லட்சம் டாலர் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இனி வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு குறைந்த செலவில் அமெரிக்க நிறுவனங்கள் பயிற்சி அளிக்க முடியாது என்றும், பெரிய நிறுவனங்கள் அமெரிக்க அரசுக்கு ஒரு லட்சம் டாலர் செலுத்திவிட்டு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கலாம் எனவும் கூறினார்.
மேலும், நமது பல்கலைக்கழகங்களில் இருந்து அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளித்து அவுட்சோர்சிங் வேலைகளை நிறுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஹோவார்டு லுட்னிக் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, வெளிநாட்டவர்களுக்காக உருவாக்கப்பட்ட GOLD CARD விசா திட்டத்தின் நிர்வாக உத்தரவிலும் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். தனிநபர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலரும், நிறுவனங்களுக்கு 2 மில்லியன் டாலரும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், GOLD CARD விசா திட்டத்தின் மூலம் அமெரிக்க கருவூலத்திற்கு பல பில்லியன் டாலர்களை கொண்டு வந்து சேர்க்கும் என அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.