ஆப்கானிஸ்தான் நாட்டில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வயதான தம்பதியை தலிபான் அரசு விடுதலைச் செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பீட்டர் மற்றும் பார்பீ ரெனால்ட்ஸ் தம்பதி, கல்வி மற்றும் பயிற்சி அமைப்பை நடத்தி வந்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்கப் படைகள் வெளியேறியதும், உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த தலிபான்களின் தலைமையிலான அரசு அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, எந்தக் குற்றவழக்கின் கீழ் என்பதே அறிவிக்கப்படாமல், ரெனால்ட்ஸ் தம்பதியை தலிபான் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.
கடந்த 7 மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரி மேற்குலக நாடுகளின் அரசுகள் வலியுறுத்தி வந்தன.
இத்துடன், ரெனால்ட்ஸ் தம்பதியை விடுதலைச் செய்ய அமெரிக்கா மற்றும் தலிபான்கள் இடையில் கத்தார் அரசு மத்தியஸ்தம் செய்தது.தொடர்ந்து, ரெனால்ட்ஸ் தம்பதியின் குடும்பத்தினர் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் வலியுறுத்தலின்பேரில் பீட்டர் மற்றும் அவரது மனைவி பார்பீ ஆகியோரை தலிபான் அரசு விடுதலைச் செய்துள்ளது.
அவர்கள் இருவரும், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் தங்களது தாயகத்துக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.