நெமிலி அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு செல்லும் வழியில் பள்ளம் தோண்டி தடை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கரியாகுடல் பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. நெல் கொள்முதல் நிலையத்திற்கு செல்லும் வழி பட்டா நிலம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வழியை சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாகவும் தெரிகிறது.
இதனால், நிலத்தின் உரிமையாளர், நெல் கொள்முதல் நிலையத்துக்கு செல்லும் வழியில் பள்ளம் தோண்டி தடை ஏற்படுத்திய நிலையில், கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை எடுத்து செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகினர்.
மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரக்கோணம் – நெமிலி நெடுஞ்சாலையில், கரியாகுடல் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அரசு அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.