நீண்ட காலமாக நடைபெற்று வந்த நடிகர் சங்க கட்டடம் விரைவில் திறக்கப்பட இருப்பதாகத் தெரிவித்துள்ள அதன் நிர்வாகிகள், இதன் மூலம் மிகப் பெரிய வருமானம் ஈட்டப்பட்டு, அதனைக் கொண்டு நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.
69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளான விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அண்மையில் மறைந்த நடிகர்கள் சரோஜா தேவி, ராஜேஷ், டெல்லிக் கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட 70 நட்சத்திரங்களுக்குச் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாகப் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தேசிய விருது பெற உள்ள ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், ஜிவி பிரகாஷ் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, தற்போது உள்ள சங்கத்தின் கடன், அடுத்து வரும் நிர்வாகிகளுக்குச் சுமையாக இல்லாத அளவுக்கு, பெரும் வருவாய் ஈட்டும் ஏற்பாடுகளைச் செய்திருப்பதாக குறிப்பிட்டார்.
இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக எதிரெதிர் அணியாக இருந்த நடிகர் சங்கம் தற்போது ஓரணியாக ஒருங்கிணைந்து விட்டதாக விஷால் குறிப்பிட்டார். நடிகர், நடிகைகளை பற்றி அவதூறாகப் பேசி பதிவிடும் Youtuber-கள் மீது தென்னிந்திய நடிகர் சங்கம் நடவடிக்கையை முன்னெடுக்குமா என்ற கேள்விக்கும் விஷால் பதிலளித்தார்.
நடிகர் விஜயின் அரசியல் பயணம் தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் முன்வைத்த போது, நடிகர் சங்கம் பற்றிய விவகாரங்களுக்கு மட்டுமே பதிலளிப்போம் என்று கூறிய விஷால் நாசூக்காக விடைபெற்றார்.