கரூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தை தவெகவினர் சுத்தம் செய்ததாக வீடியோ வெளியான விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம், தென்னிலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து தருவதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், தலைமை ஆசிரியை சுஜாதா ஷியாமளாவை அணுகியுள்ளனர்.
அதற்குத் தலைமை ஆசிரியை அனுமதி அளித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, அந்த இளைஞர்கள் பொக்லைன் இயந்திரம்மூலம் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து கொடுத்துள்ளனர்.
இதனை வீடியோவாகப் பதிவிட்ட இளைஞர்கள், தவெக கரூர் மேற்கு மாவட்ட க.பரமத்தி வடக்கு ஒன்றியம் பொறுப்பாளர் வினோத் எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்ட நிலையில், தலைமை ஆசிரியை சுஜாதா ஷியாமளாவை குளித்தலை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குப் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.