ஆம்பூரில் தனியார் பள்ளியின் இரவு காவலாளி வீட்டில் 10 மணி நேரமாக நடந்த அமலாக்கத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த சபீர் அகமது என்பவர் மதரஸா பள்ளியில் இரவு காவலாளியாகப் பணியாற்றி வரும் நிலையில், அவரது வங்கிக் கணக்கில் சட்டவிரோதமாக வருமானத்திற்கு அதிகமாகப் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில், ஆம்பூரில் உள்ள சபீர் அகமதுவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர். 15 பேர் கொண்ட குழுவினர் சுமார் 10 மணி நேரமாக நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், விசாரணைக்கு அழைக்கும்போது வர வேண்டும் என்று சபீர் அகமதுவை எச்சரித்துச் சென்றாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வாணியம்பாடி, ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கூலி தொழிலாளர்களின் ஆவணங்களை பயன்படுத்தி போலியான முகவரியில் தொழில் செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.