காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணியால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பென்னலூரில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையை இணைக்கும் இணைப்பு சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் 3 கிலோமீட்டர் தூரமுள்ள இந்த இணைப்பு சாலை, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாக சேதமடைந்து இருந்து வந்தது.
இதனால் சாலையை சீரமைத்து தர அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் புதிய சாலை அமைக்கும் பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சேதமுற்ற சாலையை பெயர்த்து எடுத்து அதன் மீது ஜல்லிகற்கள் கொட்டப்பட்டுள்ளன.
ஆனால் தற்போது வரை தார் சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் ஜல்லி கற்களில் சறுக்கி கீழே விழும் நிலை உள்ளதால் தார் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.