தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை எனச் சென்னை உயர்நீதிமன்றம் விமர்சித்துள்ளது.
அரசியல் கூட்டங்களுக்குரிய பாதுகாப்பு நெறிமுறைகளை வகுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவித்த நீதிபதி, கரூரில் ஏற்பட்ட நிகழ்வுகளைப் பார்க்கும் போது மிகுந்த வேதனையளிப்பதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், விஜய்யின் பிரசார வாகனத்தில் தொண்டர்களின் இருசக்கர வாகனங்கள் மோதியது குறித்து வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என்றும், அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்யாதது ஏன்? எனவும் காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார்.
மேலும், காவல்துறை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குக் கருணை காட்டுவதாகச் சந்தேகம் எழுப்பியதுடன், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனக் காவல்துறைக்கு தெளிவுபடுத்தினார்.
கரூரில் துயரம் நேர்ந்தபோது அனைவரும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தவெகவினர் தலைமறைவானதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை எனக் குற்றம்சாட்டினார்.
பின்னர், கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தை விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, அனைத்து ஆவணங்களையும் அவர்களிடம் ஒப்படைக்க கரூர் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.