ஆப்ரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இந்திய விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.
இந்திய விமான படையின் 93-வது ஆண்டுத் தினத்தை முன்னிட்டு விமானப்படை தளபதி ஏ.பி.சிங் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, தான் மேற்கொள்ளும் முதல் செய்தியாளர் சந்திப்பு எனக் குறிப்பிட்டார்.
இந்தியா தன்னுடைய இலக்கை எட்டியதால் பல்வேறு நலனை கருத்தில் கொண்டு அவர்களே போர் நிறுத்தம் கோரவேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளியது என்றும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது களத்தில் இருந்த 5 F16 போர் விமானங்கள், அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட 5 போர் விமானங்கள் என ஒட்டு மொத்தமாக 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறினார்
பல விமானங்கள், விமான படைத்தளங்கள் அழிக்கப்பட்டதாகவும், பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்ததில் இந்தியாவினுடைய F 4 ரக அமைப்புக்கு மிகப்பெரிய பங்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், இந்தியாவை சேர்ந்த 15 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகத் தொடர்ந்து கூறி வருவதாகவும், தங்கள் நாட்டு மக்களைத் திருப்திப்படுத்த அவர்களும் ஏதேனும் ஒன்றைக் கூற வேண்டும் என்பதால் இவ்வாறு சொல்லி வருவதாகவும் விமானப்படை தளபதி ஏ.பி.சிங் குறிப்பிட்டுள்ளார்.