பீகார் சட்டமன்றத் தேர்தல், நவம்பர் 22ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்ய பாட்னா சென்ற தேர்தல் ஆணையர்கள், அம்மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார், வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு தீவிரப் பணிகள் வெற்றியடைய பாடுபட்ட அனைத்து தேர்தல் பணியாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
மேலும், பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிகபட்சம் ஆயிரத்து 200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியற்ற மூன்று லட்சத்து 66 ஆயிரம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் தெரிவித்தார்.