தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காலாண்டு தேர்வு முடிந்து ஒருவாரம் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல் ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை காரணமாகச் சென்னையில் பணிபுரியும் தென் மாவட்ட மக்களும் சொந்த ஊர் சென்றனர்.
இந்நிலையில் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பதாலும், தொடர் விடுமுறை முடிந்ததாலும் சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்பினர்.
இதனால் பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணி வகுத்துச் சென்ற வாகனங்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
மேலும் போக்குவரத்து நெரிசலால் வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து சென்னை நோக்கிச் செல்ல கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
தொடர் விடுமுறை முடிந்து அன்றாட பணிக்கு வாகனத்தில் செல்லும் மக்களால் ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரம் வரை கார் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தொடர் விடுமுறையின்போது இது போன்று ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் மாற்றுவழியை ஏற்படுத்தித் தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.