திருச்சி சமயபுரம் கோயிலில் பக்தர்களை அவமதித்த பெண் ஊழியரை பணிநீக்கம் செய்ய வேண்டுமென இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்காக 100 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், கோயில் பெண் ஊழியர் 400 ரூபாய் கொடுத்தால் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்க முடியும் எனக் கூறி பக்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி வெளியாகி உள்ளதாகத் தெரிவித்தார்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இதுபோன்ற நிர்வாகச் சீர்கெடுகளும், பக்தர்களை மிரட்டும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பக்தியை பணமாக்குவது மட்டுமே அறநிலையத்துறையின் முழு நேர வேலையாக உள்ளது எனக் கூறியுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியன், மன நிம்மதிக்காகக் கோயிலுக்கு வரும் பக்தர்களை கோயில் ஊழியர்கள் அவமதிப்பது என்பது எந்த மாநிலத்திலும் நடக்காத செயல் எனக் கூறியுள்ளார்.
அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எந்தக் கோயில்களிலும் இனி இது போன்ற ஊழல்களும் பக்தர்களின் அவமதிப்பு செயல்களும் நடைபெறக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.