விவாகரத்து பெற்ற இளைஞர் ஒருவர், மண வாழ்க்கையிலிருந்து விடுபட்டதை Happy Divorce என்ற பெயரில் கொண்டாடித் தீர்த்த காட்சிகள் இன்ஸ்டாகிராமை ஆக்கிரமித்துள்ளன. புது மாப்பிள்ளை போன்று மீண்டும் போஸ் கொடுக்கும் அந்த இளைஞர் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.
ஒவ்வொரு பிரிவும் சோகமானது என்றும், கண்ணீரில் முடியும் என்றும் யார் சொன்னது? என்று மனைவியை விவாகரத்து பெற்ற மகிழ்ச்சியில் குதூகலிக்கிறார் இந்த இளைஞர். இங்கு ஆணின் விவாகரத்து ஒரு கொண்டாட்டமாக மாறியிருக்கிறது, சடங்குச் சம்பிரதாயம், கேக் வெட்டுதல், விவாகரத்து பெற்ற மனைவிக்கு 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரியாவிடை பரிசு, 120 கிராம் தங்கம் என வாரி வழங்கத் தயாராகிவிட்டார் இவர்.
விவாகரத்து பெறும் பெரும்பலானோர் அதிலிருந்து விடுபடப் பல மாதங்கள் செலவிடும் வேளையில் இந்த நபர் அதையே நேர்மறையாக மாற்றியுள்ளார். மனைவியிடம் இருந்து கிடைத்த சுதந்திர தாகத்தை ஸ்டைலாகக் கொண்டாடவும் முடிவு செய்தார். அதற்காகவே பிரத்யேகமான, தனித்துவமான கொண்டாட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
வீடியோ வெளியிட்டதுதான் தாமதம் அது இணையத்தில் தீயாய் பரவியதோடு, கலவையான விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது. விவாகரத்து பெற்ற அந்த இளைஞர், மரப்பலகையில் அமர, அவரது தாயார் Shuti என்ற முறைப்படி குடத்தில் கொண்டு வந்த பாலை மகன் மீது ஊற்றிப் புனிதமாக்குகிறார்.
இது கோயில்களில் பாலாபிஷேகம் என்று கூறப்பட்டாலும், வாழ்க்கையை மீண்டும் புதிதாகத் தொடங்குவதற்கான தருணமாகவும் இந்தச் சடங்கு பார்க்கப்படுகிறது… அவரது தாயார் இளைஞர்மீது பால் ஊற்றியபோது, அந்த விழா அவரது திருமணத்தின் முடிவையும், அவரது வாழ்க்கையில் ஒரு புதிய, கவலையற்ற அத்தியாயத்தின் தொடக்கத்தையும் குறிப்பதாக அமைகிறது.
அதன் தொடர்ச்சியாக Happy Divorce என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சாக்லேட் கேக்கை, உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கட் செய்து கொண்டாடுகிறார். அத்துடன் தனது மனைவிக்குப் பிரியாவிடை அளிக்கும் விதமாக 18 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும், 120 கிராம் தங்கத்தையும் வழங்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகியிருக்கும் நிலையில், ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.