சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க கவசம் வழக்கு தொடர்பாகக் கேரள போலீசார் சென்னையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2019ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ள துவாரகப் பாலகர் சிலைகளைச் செப்பனிடும் பணியை உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடம் தேவசம் போர்டு வழங்கிய நிலையில், அந்தப் பணியை சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஸ்மார்ட் கிரியேஷன் என்ற நிறுவனத்திடம் உன்னி கிருஷ்ணன் வழங்கியுள்ளார்.
தங்க முலாம் பூசி சரி செய்யப்பட்டுத் துவாரக பாலகச் சிலைகள் மீண்டும் தேவசம் போர்டு அதிகாரிகளிடம் வழங்கிய நிலையில், தங்க கவசம் செப்பனிடும் பணியின்போது 4.5 கிலோ எடைக் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது. இதனடிப்படையில், சென்னையில் உள்ள ஸ்மார்ட் கிரியேஷன் நிறுவனத்தில் கேரளப் போலீசார் சம்மன் வழங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.