அடுத்த தலைமுறைக்கான உலகின் மிகப்பெரிய இராணுவ போக்குவரத்து விமானத்தைச் சீனா உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. சீனாவின் இந்த அதிநவீன இராணுவ விமானம், எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியமின்றி ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்துக்குப் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
விமானப்படைக்கு அதிகம் செலவழித்து உலகின் மிகப்பெரிய விமானப் படையை அமெரிக்கா வைத்திருக்கிறது. அமெரிக்க விமானப்படையில் 13000 க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், 5500க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் உள்ளன.
மேலும், 2,643 போர்ப் பயிற்சி விமானங்கள்,2085 ஜெட் விமானங்கள்,945 போக்குவரத்து விமானங்களை அமெரிக்க வைத்துள்ளது. இது அமெரிக்காவுக்கு அடுத்த 7 நாடுகள் வைத்துள்ள மொத்த விமானப்படைகளின் அளவை விடப் பெரியது ஆகும். அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக ரஷ்யாவின் விமானப்படை, சுமார் 4,292 போர் விமானங்களுடன் இரண்டாவது இடத்தில உள்ளது.
சீனாவைப் பின்னுக்குத் தள்ளி, உலக அளவில் மூன்றாவது சக்தி மிக்க விமானப்படையாக இந்திய விமானப்படை உள்ளது. புவிசார் அரசியல் மாற்றங்களின் வெளிப்பாடாக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் இராணுவப் பலத்தை மேம்படுத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவுக்குப் போட்டியாக, போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், வான்வழி முன்னெச்சரிக்கை விமானங்கள், அதிநவீன ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் எனச் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ விமானப்படை முன்னேறி வருகிறது.
உலக அளவில் மிகப் பெரிய இராணுவப் போக்குவரத்து விமானத்தை அமெரிக்காவே வைத்துள்ளது. அமெரிக்காவின் சி-5 கேலக்ஸி விமானம், பாதுகாப்பு துறைக்கான சரக்கு மற்றும் பணியாளர்களைக் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். C-5M சூப்பர் கேலக்ஸி விமானம், 28 சக்கரங்கள், நான்கு ஜெனரல் எலக்ட்ரிக் இன்ஜின்கள் கொண்டதாகும். இந்த விமானம், 4,800 கடல் மைல்கள் வரை பறக்கக் கூடியதாகும். இந்நிலையில் தான், அடுத்த தலைமுறைக்கான உலகின் மிகப்பெரிய இராணுவ போக்குவரத்து விமானத்தை உருவாக்கச் சீனா திட்டமிட்டுள்ளது.
இதற்கான blended wing body வடிவமைப்பு வரைபடம் வெளிவந்துள்ளது. இந்த விமானம், எரிபொருள் நிரப்பாமல் 6,500 கிலோமீட்டருக்கு மேல் 120 மெட்ரிக் டன் வரை சரக்குகளை எடுத்துச் செல்லும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இது, அமெரிக்காவின்C-5M சூப்பர் கேலக்ஸி மற்றும் உக்ரைனின் அன்டோனோவ் An-124 விமானத்தை விடவும் பெரியதாகும். ஏற்கெனவே சீனாவிடம் 4,500 கிலோமீட்டருக்கு மேல் 66 டன்களைச் சுமந்து செல்லும் திறன் உடைய கனரக விமானமான Y-20 போர் விமானம் உள்ளது. சீனா உருவாக்கும் புதிய விமானம் Y-20 யை விட இரண்டு மடங்குச் சுமை திறனுடன், 40 சதவீதத்துக்கும் அதிகமாக வரம்பைக் கொண்டுள்ளது.
தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள்மீது படையெடுப்பதற்கும், தனது பெல்ட் அண்ட் ரோடு திட்டங்களுக்கு அவசர காலங்களில் உதவுவதற்கும் இந்தப் புதிய விமானம் பயன்படும் என்று கூறப் படுகிறது. சுமார் 80க்கும் மேற்பட்ட Y-20 விமானங்களை வைத்துள்ள சீனா, உலகின் மிகப் பெரிய இராணுவ போக்கு வரத்து விமானத்தை உருவாக்கி, இராணுவப் பலத்தில் அமெரிக்காவை விடவும் ஒரு படி முன்னேறியுள்ளது.
இதற்கிடையே, பிரதமர் மோடியின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தின் கீழ், மஹிந்திரா குழுமமும் பிரேசிலின் எம்ப்ரேயர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவனமும் C-390 மில்லினியம் இராணுவ போக்குவரத்து விமானத்தை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
26 டன் எடையை சுமந்து 470 கடல் மைல் வேகத்தில் பறக்கக்கூடிய C-390 மில்லினியம் விமானம், சரக்கு மற்றும் துருப்பு போக்குவரத்து, வான்வழி எரிபொருள் நிரப்புதல், மருத்துவ வெளியேற்றம், தீயணைப்பு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.