சேலத்தில் திகில் படங்களில் வரும் பாழடைந்த பங்களா போல் காட்சியளிக்கும் வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்பில் பொதுமக்கள் வாழவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆங்காங்கே தேங்கியிருக்கும் கழிவுநீரால் பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டை எதிர்கொள்ளும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள நாராயண நகர் மற்றும் குறிஞ்சி நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. 10 அலகுகளில் 400க்கும் அதிகமான வீடுகளை உள்ளடக்கியிருக்கும் இந்தக் குடியிருப்பு மிகவும் பாழடைந்த நிலையில் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் குடியிருப்புகளைச் சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை தற்போதுவரை நிறைவேறாமல் இருப்பதாகக் குடியிருப்புவாசதிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திகில் திரைப்படங்களில் வரும் பழமையான கட்டடங்களை போலக் காட்சியளிக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடிநீர் தொடங்கி எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக அடிப்படை வசதிகளில் ஒன்றான கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லாத காரணத்தினால், ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயமும் எழுந்துள்ளது.
கழிவுநீர் கால்வாய் தண்ணீரை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், சில நேரங்களில் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அதிலும் அவ்வப்போது இடிந்து விழும் மேற்கூரைகள் மற்றும் பால்கனிகளால் சிலர் காயமடைந்திருக்கும் நிலையில் இரவு நேரங்களில் நிம்மதியாகத் தூங்கக் கூட முடியாத அவலநிலைக்கு குடியிருப்புவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
சேதமடைந்த நிலையில் இருக்கும் குடியிருப்பைப் புணரமைக்க வேண்டும் எனப் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதற்கான தொடக்கப்பணிகள் கூட இன்றளவும் நடைபெறவில்லை என்பதே குடியிருப்புவாசிகளின் பிரதான குற்றச்சாட்டாக அமைந்துள்ளது.
குடியிருப்புவாசிகளிடம் உரிய நேரத்தில் உரிய வாடகையை பெறும் வீட்டுவசதிவாரியம் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது கடமை என்பதை உணர்ந்து உடனடியாகச் சிதிலமடைந்த குடியிருப்புகளைப் புனரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.