வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மோந்தா’ புயலாக உருமாறி வலுவடைந்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளது.
மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் வட கிழக்கு திசையில் மோந்தா புயல் நகர்ந்து வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னைக்கு 640 கி.மீ. தொலைவில் மோந்தா புயல் மையம் நிலை கொண்டுள்ளது.
புயலானது வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளைத் தீவிர புயலாக உருவெடுக்கும் என்றும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே, காக்கி நாடாவுக்கு அருகே தீவிர புயலாக நாளை மாலை அல்லது இரவில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
இதற்கிடையே மோந்த புயல் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
















