2027ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் இந்தியாவின் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்தப் பணிகள் மற்றும் பயிற்சி அளிக்கும் பணிகள் தமிழகத்தில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டன.
நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் அரசிதழில் கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, திருவள்ளூர் மாவட்டத்தின் ஆர்.கே பேட்டை மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள மாங்காடு ஆகிய மூன்று இடங்களில் இந்தப் பணிகள் தொடங்கின.
இம்முறை கணக்கெடுப்பு முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளது. 2 கட்டங்களாக நடத்தப்படும் இந்தக் கணக்கெடுப்பு பயிற்சிகளில், நவம்பர் 1 முதல் 7ஆம் தேதி வரை சுய விவரங்கள் மற்றும் வார்டுகள் குறித்த சோதனைகள் நடைபெறுகின்றன.
நவம்பர் 10 முதல் 30ம் தேதி வரை நடைபெறும் பயிற்சியில் வீடுகளில் கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பயிற்சியில் வருவாய், கல்வி, சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
















