அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் குறித்த விளம்பரத்துக்காக அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணமானது அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதில் அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன், 1987ம் ஆண்டு ஆற்றிய உரைகளில் சில குறிப்புகள் பயன்படுத்தப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா உடன் நடத்தி வந்த வர்த்தக பேச்சுகள் அனைத்தையும் நிறுத்தி வைத்தும், அந்நாட்டு பொருட்களுக்கான வரியை 10 சதவீதம் அதிகரித்தும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய விளம்பரத்துக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார். ஆசியா பசுபிக் மாநாட்டிற்கு இடையே தென் கொரிய அதிபர் அளித்த விருந்தின் போது, டிரம்ப்பிடம் தனிப்பட்ட முறையில் மார்க் கார்னி மன்னிப்பு கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
















