பாலியல் புகார் விவகாரத்தில் ஈவிபி பிலிம் சிட்டி உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் Instagram பிரபலம் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி மீது இன்ஸ்டாகிராமம் பிரபலமும், ஆடை வடிவமைப்பாளரான பார்வதி என்பவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.
பெங்களூரு அருகே வயாலி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தோஷ் ரெட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நசரத்பேட்டை காவல் நிலையம் மற்றும் ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவில் பார்வதி மீது சந்தோஷ் ரெட்டி மோசடி புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமான பார்வதியுடன் நட்பாகப் பழகி வந்ததாகவும், தனது வீட்டின் சுப நிகழ்ச்சிகளுக்கு ஆடை, வைர நகைகளை வாங்கி தருவதாகக் கூறிய பார்வதியிடம் 3 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாகவும் கூறினார்.
பின்னர், பொருட்களை வாங்க பெங்களூரு சென்றபோது ஒரு சில பொருட்களைத் தன்னிடம் வழங்கிய பார்வதி, மீதமுள்ள பொருட்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறேன் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
20 நாட்கள் கழித்து தொடர்பு கொண்டபோது தன்னிடம் பணம் கொடுக்கவில்லை என அலட்சியமாகப் பதிலளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், செல்வாக்கான நபர்களைக் குறி வைத்து மோசடியில் ஈடுபட்டு வரும் பார்வதி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சந்தோஷ் ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.
















