கர்நாடகாவில் மிகவும் பிரபலமான சாணியடி திருவிழாவை ஆவணப் படமாகப் பதிவிட முயன்ற அமெரிக்க யூடியூபர், இந்தியர்களின் ஒற்றைக் குரலால் பின்வாங்கியுள்ளார். என்ன நடந்தது. அமெரிக்க யூடியூபர் என்ன செய்தார் என்பதை தற்போது பார்க்கலாம்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான பீரேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கோரேஹப்பா திருவிழா மிகவும் பிரபலம். கிராமம் முழுவதும் சேகரிக்கப்படும் மாட்டு சாணத்தை கோயிலில் பின்புறம் குவிக்கும் பக்தர்கள், அவற்றைப் பெரிய பெரிய உருண்டைகளாக உருட்டி, ஒருவர் மீது மற்றொருவர் வீசி விளையாடுவதும், பின்னர் அங்குள்ள குளத்தில் குளித்துச் சுவாமியை வழிபடுவதும் மரபு.
இத்திருவிழாவில், மிகுந்த ஆர்வத்தோடு பங்கேற்றிருக்கிறார் அமெரிக்காவின் பிரபல யூடியூபர் டைலர் ஒலிவேரா. அதனை ஆவணப்படமாக வெளியிடப் போவதாகக் கூறிய அவர், இந்தியாவின் “சாணம் வீசும் திருவிழாவின் உள்ளே” என்ற தலைப்பில் ஒரு டீசரை வெளியிட்டது பல மில்லியன் பார்வைகளை கடந்தது. திருவிழாவில் பாதுகாப்பு கவச உடை அணிந்தபடி கலந்து கொண்ட அவர், அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
இந்தியாவின் சாணம் வீசும் திருவிழாவில் கலந்து கொண்டது மோசமான அனுபவமாக இருந்தது, நான் பிழைக்க வேண்டும் என்று தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் பதிவிட்டிருந்தார். இது இந்தியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவின் பாரம்பரிய திருவிழாவை டைலர் ஒலிவேரா அவமதித்துவிட்டதாகப் பலரும் கண்டனம் பதிவுகளைப் பதிவிட்டனர். 99 சதவிகித இந்தியர்களுக்கே சாணம் வீசும் திருவிழாவைப் பற்றித் தெரியாதபோதும், அத்திருவிழாவையும், தீபாவளியையும் தொடர்புபடுத்தியிருப்பது இனவெறியின் அடையாளம் என்றும் அமெரிக்க யூடியூபர் மீது விமர்சன கணைகளைத் தொடுத்தனர். ஆனால் இனவெறியை பற்றிய குற்றச்சாட்டுகளை டைலர் ஒலிவெரோ மறுத்திருந்தார்.
ஒரு அசாதாரண கலாச்சார நிகழ்வைக் கேலி செய்வதற்குப் பதிலாக அதை ஆவணப்படுத்துவதே தனது நோக்கம் என்றும் விளக்கம் அளித்திருந்தார். எனினும் கண்டனங்கள் வலுத்த நிலையில், பல்வேறு பரிசீலனைக்கு பின்னர், சாணம் வீசும் திருவிழாபற்றிய ஆவணப்படத்தை பதிவேற்றம் செய்ய விரும்பவில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறியுள்ளார். தன்னால் 150 கோடி இந்தியர்களைச் சமாளிக்க முடியாது என்றும் பதிவிட்டுள்ள அவர், பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தனது வாழ்க்கையை ஒரு நரகமாக மாற்றிவிட்டதாகவும், என் குடும்பம் நான் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வகையில் தாக்கப்பட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
சாணம் வீசும் திருவிழாவுக்கு வந்தது தமது வாழ்க்கையின் மோசமான முடிவு என்றும், தாம் இந்தியாவின் சக்தியைக் குறைத்து மதிப்பிட்டேன் என்றும் பதிவிட்டுள்ளார். இந்தியர்களையோ, அவர்களின் மதத்தையோ அல்லது அவர்களின் கலாச்சாரத்தையோ புண்படுத்தத் தாம் ஒருபோதும் விரும்பவில்லை.
இந்த அசாதாரண திருவிழாவில் பங்கேற்று, உலகம் பார்க்கும்படி பகிர்ந்து கொள்ள விரும்பினேன் என்றும் கூறியுள்ளார். இதைப் படிக்கும் அனைத்து இந்தியர்களும் தயவுசெய்து என் குடும்பத்தைத் தனியாக விட்டுவிடுமாறு கேட்டுக்கொள்வதாகவும் கெஞ்சியிருக்கிறார் அமெரிக்க யூடியூபர் டைலர் ஒலிவேரா. ஆனால், இந்தியாவின் கலாச்சாரத்தைப் பார்த்து உலகம் வியந்துவரும் சூழலில், வேடிக்கையான சில திருவிழாக்கள் மொத்த இந்தியாவையும் பிரதிபலிப்பதாக அமெரிக்க யூடியூபர் முன்னிறுத்த முயன்றதையோ பலரும் சாடியதாக இணையவாசிகள் கூறி வருகின்றனர்.
















