ஒரு சில வினாடிகளில் விரும்பும் டிசைனில் முடி வெட்டும் எந்திரத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இன்றைய காலத்தில் அழகாக முடிவெட்டிக் கொள்வது சவாலான வேலையாக மாறிவிட்டது. நண்பர்கள் கேலி செய்துவிடக் கூடாது என்பதற்காகவே, பிரத்யேகமான சிகை அலங்கார நிபுணர்களைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
மேலும், அதிக பணம் செலவழித்தும், சலூன்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இத்தகைய சூழல்களைத் தவிர்க்கும் பொருட்டு நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் ஆட்டோ ஸ்டீரிட் பார்பர் எனப்படும் தானியங்கி முடி வெட்டும் எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த இயந்திரத்தில், விரும்பிய ஸ்டைல் குறித்த கட்டளைகளைச் சொடுக்கி, வாஷிங்மெஷின் கதவு போன்ற ஒரு திறப்புக்குள் தலையை நுழைத்தால் சில வினாடிகளில் சிகை அலங்காரம் முடிந்து விடுகிறது.
இதற்கு அதிகபட்சமாக ஒரு நிமிடம் கூட ஆகாது. அத்துடன் வெட்டப்படும் முடிகளையும் தானியங்கி இயந்திரமே சேகரித்துக் கொள்கிறது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
















