அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம் தொடர்பாக, ஜனநாயகக் கட்சியினருடன் விரைவில் சமரசம் செய்ய வாய்ப்பில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகச் செலவீனங்களுக்கு ஒதுக்கும் நிதி தொடர்பான மசோதா நிறைவேற்றப்படாததால், 6-வது வாரமாக அரசு நிர்வாகம் முடங்கியிருக்கிறது.
இதன் காரணமாகச் சுமார் 6 லட்சத்து 70 ஆயிரம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் சுமார் 7 லட்சத்து 30 ஆயிரம் பேர் ஊதியமின்றி பணிபுரிந்து வருகின்றனர். இதனால் அமெரிக்காவில் அன்றாட பணிகள் ஸ்தம்பித்துள்ள நிலையில், அரசின் முக்கிய துறைகள் அனைத்தும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து பேசியுள்ள அதிபர் டிரம்ப், மலிவு விலை பராமரிப்பு சட்டத்தின் வரிச் சலுகைகளை நீட்டிக்கக் கோரும் ஜனநாயகக் கட்சியினருடன் சமரசம் செய்ய வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளார்.
மேலும், குடியரசு கட்சியினர் பணி நிறுத்தத்தை விரைவாக முடிவுக்குக் கொண்டு வந்து, பெரும்பாலான சட்டங்களுக்கு 60 செனட் ஓட்டுக்கள் தேவைப்படும் முறையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
















