பீகாரில் விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம், நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து, கடந்த 6ம் தேதி முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் பீகார் வரலாற்றிலேயே முதல்முறையாக 65 புள்ளி பூஜ்ஜியம் 8 சதவீதம் வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதற்காக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்பதற்காகப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என மேல்மட்டத் தலைவர்கள் அனைவரும் பீகாரிலேயே முகாமிட்டனர் என்றால் மிகையாகாது.
அதேபோல், இண்டி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவடைந்ததை அடுத்து, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் தீவிரமாகச் செய்து வருகிறது.
















